ஈரானை வன்மையாக கண்டிக்கிறோம் – தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு 22 நாடுகள் வலியுறுத்தல்
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு விதித்த தடையை நீக்க ஈரானுக்கு 22 நாடுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகள், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன.
பாதுகாப்பான பயணம் சர்வதேச சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான், கனடா, தென் கொரியா, நியூசிலாந்து, டென்மார்க், லாட்வியா, சுலோவீனியா, எஸ்டோனியா, நோர்வே, ஸ்வீடன், பின்லாந்து, செக் குடியரசு, ருமேனியா, பஹ்ரைன், லிதுவேனியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணைந்து, தாக்குதல்களை நிறுத்தக் கோரிட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
“வளைகுடாவில் ஆயுதமற்ற வர்த்தகக் கப்பல்கள் மீதான ஈரானின் சமீபத்திய தாக்குதல்களையும், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலைகள் உள்ளிட்ட பொதுமக்களின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களையும், ஈரானியப் படைகளால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்,
தீவிரமடைந்து வரும் மோதல் குறித்து நாங்கள் எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்.
வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக நீரிணையை தடுக்கும் தனது அச்சுறுத்தல்கள், கண்ணிவெடிகள், ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் பிற முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறும், ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் 2817 க்கு இணங்குமாறும் ஈரானை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





