கோட்டாபய தப்பியோட எவ்வளவு செலவானது? தகவல்களை வெளியிட உத்தரவு!
மக்கள் புரட்சியின்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற போது, ஏற்பட்ட செலவுகள் மற்றும் தகவல்களை மறைப்பதற்கு கடற்படை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச 2022 ஆம் ஆண்டு ஜூலையில் நாட்டிலிருந்து தப்பிச் சென்றது தொடர்பான செலவீனங்களை, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி, கடற்படை தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்தத் தகவலை வெளியிடுவது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கடற்படை வாதிட்டது, ஆனால் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கடற்படைக் கப்பலின் பயண மற்றும் எரிபொருள் செலவுகள், அத்துடன் அதில் பயணித்தவர்களின் பெயர்கள் குறித்த விரிவான விபரங்களைக் கோரி, ஊடகவியலாளர் அலி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இதற்கான நிதித் தகவல்களை வெளியிடுமாறு கடற்படைக்கு உத்தரவிட்டிருந்தாலும், உடன் பயணித்த நபர்களின் அடையாளங்களை இரகசியமாக வைத்திருக்க அனுமதித்திருந்தது.
இதனை எதிர்த்து, கடற்படை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சென்றிருந்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தகவல் பெறும் உரிமை ஒரு அடிப்படை பொது உரிமை என்றும், அரச நிறுவனங்களைப் பொறுத்தவரை “இரகசியம் என்பது விதியாக அல்ல, விதிவிலக்காக இருக்க வேண்டும்” என்றும், நீதிமன்றத்தின் தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவை உறுதிசெய்ததன் மூலம், முக்கியத்துவம் வாய்ந்த கோட்டாபய ராஜபக்சவின் வெளியேற்றத்தின் போது ஏற்பட்ட சரியான செலவுகளை கடற்படை வெளியிட வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.





