யாழில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான சிறுவன் – நீதி கோரி போராட்டம்
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றுக்கு அருகில் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்ட நிலையி இப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முடியாது என பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து , அவர்களை வெளியேற்றியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து போராட்ட காரர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 10 ஆம் திகதி தமது கட்டளையை மீறி சென்ற வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , வாகனத்தை செலுத்திய 17 வயதான வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையிலும் , துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் மீது குறைந்தபட்ச விசாரணைகள் கூட முன்னெடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அதேவேளை சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





