கிளிநொச்சியில் சட்டவிரோத கடல் அட்டை வேட்டை – 10 பேர் கைது
கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் இரவு வேளையில் கடல் அட்டைகளை பிடித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.
இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் இன்று (23.02) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே
அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 1,232 கடல் அட்டைகள், மூன்று டிங்கி படகுகள் மற்றும் சுழியோடல் உபகரணங்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன்போது, 29 முதல் 54 வயதுக்கு இடைப்பட்ட, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைத் தொகுதி, டிங்கி படகுகள் மற்றும் சுழியோடல் உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.





