“48 மணி நேரம் மட்டுமே!” – டெக் நிறுவனங்களுக்குப் பிரிட்டன் அரசு விடுத்த எச்சரிக்கை.
பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer), சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தளங்களுக்கு எதிராக ஒரு கடுமையான சட்டத்தை அறிவித்துள்ளார். பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான சமுக வலைதள வன்முறையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு நபர் தனது அனுமதி இல்லாமல் நெருக்கமான அல்லது ஆபாசமான தனது படங்கள் பகிரப்பட்டுள்ளதாக புகாரளித்தால், அந்தத் தளம் 48 மணி நேரத்திற்குள் அந்தப் படத்தை நீக்க வேண்டும் என்பது இனி சட்டபூர்வமான கட்டாயமாகும்.
இந்தச் சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருவாயில் இருந்து 10% வரை அபராதம் விதிக்கப்படலாம். இது பெரிய நிறுவனங்களுக்குப் பல கோடி ரூபாய்கள் (பில்லியன் கணக்கில்) இழப்பை ஏற்படுத்தும்.
அதுமட்டும் அல்லாது தொடர்ச்சியாக விதிகளை மீறும் தளங்கள் பிரிட்டனில் செயல்படத் தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் ஆபாசப் படங்கள் (Nudification tools) மற்றும் டீப்ஃபேக் படங்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமானது தற்போது நிலவும் (Online Safety Act )வலைதள பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தில் ஒரு திருத்தமாக இது கொண்டு வரப்படுகிறது. முன்னதாக, இத்தகைய படங்களை நீக்க பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆனதால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். “தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை காலம் முடிந்துவிட்டது” என்று தொழில்நுட்பத் துறைச் செயலர் லிஸ் கெண்டல் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவிலும் தகவல் தொழில்நுட்ப விதிகளில் (IT Rules) மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை நீக்க வெறும் 3 மணி நேரம் மட்டுமே கெடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




