உக்ரைன் போரில் உயிரிழந்த வடகொரிய வீரர்கள் – கிம் வழங்கும் சலுகை!
ரஷ்ய படை வீரர்களுடன் இணைந்து போராடி உயிர்நீத்த வடகொரிய வீரர்களின் குடும்பங்களுக்கு புதிய வீட்டினை கட்டிக்கொடுக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வீடமைப்பு திட்டத்தின் நிறைவு குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un) நேற்று அறிவித்துள்ளார்.
கிம் ஜாங் உன் சேப்யோல் தெரு (Saeppyol Street) என்ற பெயரிடப்பட்ட தெரு வழியாக தனது மகளுடன் நடந்து சென்று வீடுகளை பார்வையிடும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சமீபகாலமாக உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் போரிட அனுப்பப்பட்ட துருப்புக்களை மகிமைப்படுத்தும் நடவடிக்கையை கிம் முன்னெடுத்து வருகிறார்.
எடுத்துக்காட்டாக ஒரு நினைவுச் சுவரை நிறுவுதல் மற்றும் ஒரு அருங்காட்சியகம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சுமார் 6,000 வட கொரிய துருப்புக்கள் ரஷ்ய – உக்ரைன் போரில் கொல்லப்பட்டதாக தென்கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை தெரிவித்துள்ளது.





