ரஷ்யாவில் வாட்ஸ்அப் தடை – டிஜிட்டல் கட்டுப்பாடுகள் தீவிரம்
செயலிகள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வரும் கிரெம்ளின், ரஷ்யாவில் வாட்ஸ்அப் பயன்பாட்டைத் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், ரஷ்யாவில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.
இந்நிலையில் “மெட்டா ரஷ்ய சட்டங்களுக்கு இணங்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். சட்டப்படி இணங்கி உரையாடலில் ஈடுபட்டால் மீண்டும் செயல்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
விமர்சகர்கள், அரசு உருவாக்கிய ‘மேக்ஸ்’ செயலியைப் பயன்படுத்த மக்களைத் தள்ளுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்துகின்றனர். எனினும், மேக்ஸ் ஒரு “தேசிய மாற்று தளம்” மட்டுமே என அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது. மேக்ஸ் தற்போது தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் பொது பிரசாரங்கள் மூலம் தீவிரமாக விளம்பரப்படுத்தப்படுகிறது.
இதனிடையே, பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து டெலிகிராம் செயலிக்கும் அணுகல் மேலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெலிகிராம் ரஷ்யாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக உக்ரைன் போரில் தகவல்தொடர்புக்கு பயன்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தரைமட்ட தகவல்தொடர்பை பாதிக்கும் என சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஆகியவை பயனர்களின் தரவை நாட்டிற்குள் சேமிக்க மறுப்பதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது. மேலும், மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய தளங்களில் ஒன்றாக வாட்ஸ்அப் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கு பதிலளித்த வாட்ஸ்அப், “100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான தனிப்பட்ட தொடர்பிலிருந்து துண்டிப்பது பின்னோக்கிய நடவடிக்கை” என அறிக்கை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பிற்குப் பின்னர், மெட்டா “தீவிரவாத அமைப்பு” என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.VPN வழியாக மட்டுமே அணுக முடிகிறது.





