இனவாதம், அடிப்படைவாதம் தோற்கடிக்கப்படும்: சுதந்திர தின உரையில் ஜனாதிபதி திட்டவட்டம்!
” இனவாதம் மற்றும் அடிப்படைவாதம்மூலம் அழிவே ஏற்படுகின்றது. எனவே, இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்.””
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க President Anura Kumara Dissanayake தெரிவித்தார்.
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா, சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றுவருகின்றது.
சுதந்திர தின உரையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
“இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.
எல்லா வளங்கள் இருந்தாலும் மனித வளம் மிக முக்கியம். எனவே, அறிவு, ஆற்றல் மற்றும் தொழில்நுட்பம் என எல்லா துறைகளிலும் மனித வளத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
எமது கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராகிவருகின்றோம். இதற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றோம்.
ஒற்றுமையிலேயே மனித வளத்தின் வெற்றி தங்கியுள்ளது. நாம் பிளவுபட்டு நின்றால் ஒற்றுமையின் பலம் தெரியவராது.
இலங்கையில் இரு மொழிகள் உள்ளன. அடையாளம் மற்றும் கலாசார உரிமைகள் உள்ளன. எனவே, ஒவ்வொரு இன குழுமங்களினதும் அடையாளம், உரிமைகள் ஏற்கப்பட வேண்டும்.
இனவாதம் மற்றும் அடிப்படைவாதம்மூலம் அழிவே ஏற்படுகின்றது. எனவே, இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்.” – என்றார் ஜனாதிபதி.





