தெற்கு கடற்பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு: ஐவர் கைது!
இலங்கையின் தெற்கு பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகில் இருந்து பெருந்தொகையான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இவற்றின் சந்தை பெறுமதி 200 கோடி ரூபாவரை இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடி படகொன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த படகு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவேளை, போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. படகில் இருந்த ஐவர் கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கப்பல் இன்று காலை திக்ஹோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.
11 பொதிகளில் இருந்தே ஐஸ் மற்றும் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன.
169 கிலோ ஐஸ் போதைப்பொருளும், 21 கிலோவுக்கு மேற்பட்ட ஹெரோயினும் பொதிகளுக்குள் இருந்துள்ளன என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று மீன்பிடி துறைமுகத்துக்கு சென்றிருந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
போதைப்பொருளை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். மக்களால் வழங்கப்படும் தகவலின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.





