இலங்கையில் காலநிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று முதல் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும், கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.