பாரீஸில்‘அல்லாஹு அக்பர்’என முழங்கியபடியே சுற்றுலா பயணிகளுக்கு கத்திக்குத்து… ஒருவர் பலி,இருவர் படுகாயம்!
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் மர்ம நபர் ஒருவர் காசாவுக்கு ஆதரவாக சுற்றுலாப் பயணிகளை கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்தனர்.
பாரீஸ் நகரில் பிரபலமான காய் டி கிரெனல் பகுதியில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குழுமியிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ’அல்லாஹு அக்பர்’ என்று முழங்கியபடியே தன் கையில் இருந்த கத்தியால் அங்கிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அடுத்தடுத்து மூன்று பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் பொலிஸார் விரைந்து சென்று சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதனிடையே கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை, உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின், காய் டி கிரெனல் பகுதியில் பொலிஸாரும், மீட்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் காசா மீதான தாக்குதல் காரணமாக விரக்தியில் இருந்ததாகவும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பாரீஸில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.