ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டு தென்னங்கன்றை அள்ளி சென்றனர்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் காரை ஊராட்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு தலைமையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70வது பிறந்த நாள் முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க விழா நடைபெற்றன.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம்,
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
மேலும் இக்கூட்டத்தில் திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிவுறும் நிலையில் தேர்தல் வாக்குறுதியாக பொதுமக்களிடம் கூறிய வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டன எனவும்,
திமுக திராவிட ஆட்சியில் பெண்களுக்கு என தனி முக்கியத்துவம் அளித்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய பல்வேறு நல திட்டங்களையும் பள்ளி,
கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளையும் அளித்து பெண்களின் காப்பாளராக திமுக அரசு வழங்குகின்றன என இக்கூட்டத்தில் தெரிவித்தனர்.
மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து வசதி, கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி திட்டம்,
குடும்ப இல்லத்தரசிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் அமுல்படுத்த உள்ளதாக இருக்கும் திட்டம் என பல்வேறு திமுக அரசு கொண்டுவந்த நல திட்டங்களை பொதுமக்களிடையே பட்டியலிட்டனர்.
பின்பு பெண்களுக்கு சேலை, சில்வர் பாத்திரம், தென்னங்கன்று என நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இவற்றில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மேடையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்பு திமுக நிர்வாகிகள் மூலம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டன.
ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்குமோ, கிடைக்காதோ என்று முட்டி மோதிக் கொண்டு மேடை அருகே வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை அள்ளி சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இவற்றில் ஆண்கள், பெண்கள், முதியவர் என கட்டுக்கடங்காமல் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தென்னங்கன்று எடுக்கும் நோக்கில் ஒருவரோடு ஒருவர் மேல் விழுந்தும் ஒருவர் மூன்று,
நான்கு தென்னங்கன்றுகளை அள்ளி சென்றதும் கூடியிருந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.
இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவேந்திரன், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் கவிதா டெல்லி பாபு, காரை ஊராட்சி மன்ற சுயேச்சை தலைவர் வள்ளி செல்வம்,
திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.