பாலஸ்தீன ஆர்வலர்கள் நால்வருக்கு பிரிட்டனில் சிறை தண்டனை!
இஸ்ரேலை தளமாகக் கொண்ட பாதுகாப்புத் தளவாட நிறுவனத்தின் பிரித்தானிய கிளையில் பாரிய சேதத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் Palestine Action அமைப்பைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், Bristol நகருக்கு அருகிலுள்ள Elbit Systems தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து ஷார்லோட் ஹெட் (30), சாமுவேல் கார்னர் (23), லியோனா காமியோ (30) மற்றும் பாத்திமா ரஜ்வானி (21) ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களில் சாமுவேல் கார்னருக்கு, சொத்துக்களை சேதப்படுத்தியமை மற்றும் காவல் துறை அதிகாரி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக 7 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை வாகனத்தை அத்தொழிற்சாலை வளாகத்திற்குள் ஓட்டிச் சென்ற ஷார்லோட் ஹெட்டிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், லியோனா காமியோவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதுடன், பாத்திமா ரஜ்வானிக்கு 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து Green கட்சியின் தலைவர் சாக் போலன்ஸ்கி கூறுகையில், “இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கும் நிறுவனத்திற்கு எதிராக நேரடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் சிறையிலடைக்கப்படுவதைப் பார்ப்பது நெஞ்சை உலுக்குகிறது” என்றார்.
இந்தத் தீர்ப்பு “போராட்ட உரிமையின் மீதான மிகவும் ஆபத்தான தாக்குதல்” என்றும் அவர் மேலும் கூறினார்.
அதேபோல், இந்தத் தண்டனைகளின் அளவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது என்று லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் மக்டொனல் தெரிவித்துள்ளார்.





