பயங்கரவாத தடைச்சட்டம் பயன்பாடு: தமிழரசுக் கட்சி போர்க்கொடி!
சொல்லிசைப் பாடகர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சந்திவெளி ‘எக்கோ’ விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்படப் பலர், கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி எங்களுடன் இணைந்து கையெழுத்துச் சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால், இன்று அதே சட்டம் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
ஒரு பாடலுக்காக ஒருவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பது ஒரு ஜனநாயக நாட்டில் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடாகும்.
கடந்த காலங்களில் புலிக்கொடி அல்லது புலிகளுடன் தொடர்புடைய சின்னங்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது சர்ச்சைக்காக்கப்பட்டுள்ள அந்தப் பாடலில் அவ்வாறான எந்தவொரு உள்ளடக்கமும் காணப்படவில்லை.
இது வெறுமனே ஒரு எழுச்சிப் பாடல் மட்டுமே. அதனை அடிப்படையாகக் கொண்டு ஓர் இளைஞரைப் பயங்கரவாதி எனச் சித்தரித்துக் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பது மிகவும் மோசமான மற்றும் கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும்.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு சூழலில், இவ்வாறான அநீதியான சம்பவங்கள் மக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும்.” – என்றார் இரா.சாணக்கியன்.




