செப்டம்பரில் இலங்கைக்கு ஆபத்து: எதிரணி எச்சரிக்கை!
“எதிர்வரும் செப்டம்பர் மாதமாகும்போது இலங்கையில் பாரிய நெருக்கடி ஏற்படும். கோட்டாபய – 02 நிலைமைக்கூட தோற்றம்பெறலாம்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு ,
“டொலரைக்கூட முறையாக நிர்வாகிக்க முடியாத ஆட்சியே இது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆகும்போது பாரிய பிரச்சினையை இந்நாடு எதிர்கொள்ள நேரிடும். இதனை அநுரகுமார திஸாநாயக்கவால் நிர்வகிக்க முடியாமல்போகும்.
நான் இன்று இரகசியமொன்றைக் குறிப்பிடுகின்றேன். அதாவது “மூன்றெழுத்து” தொடர்பில் அடுத்த 4 மாதங்களுக்குள் இந்த அரசாங்கம் தீர்க்கமான அரசியல் முடிவொன்றை எடுக்கும்.
மூன்றெழுத்து என்றால் என்னவென்று என்னிடம் கேட்க வேண்டாம். அது எஸ்ஜேபியோ அல்லது யுன்பியோ கிடையாது.
அந்த மூன்றெழுத்துடன் தீர்க்கமான முடிவுக்கு சென்ற பிறகு, நாட்டில் கோட்டாபய -02 உருவாகும். நாம் கூறிய அனைத்தும் நடந்துள்ளது.” – என்றார் நிரோஷன் பாதுக்க.
நிரோஷன் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என்பதுடன், மேல்மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.





