டயஸ்போராக்களின் தேவைக்கேற்ப செயல்படுகிறது NPP அரசு! கூட்டு எதிரணி குற்றச்சாட்டு!
“ வாக்களித்த மக்கள் பற்றி சிந்திக்காது, டயஸ்போராக்களின் தேவைக்கேற்பவே என்பிபி அரசாங்கம் செயல்படுகின்றது. இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு ஜனநாயக வழியில் கூட்டு எதிரணி போராடும்.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரும், அரசியல் செயற்பட்டாளருமான சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக டயஸ்போராக்கள், என்.ஜி.ஓக்களின் தேவைக்கேற்பவே நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
எனவே, எமது தலைமுறையினரின் எதிர்காலம் பற்றி எமக்கு அச்சம் நிலவுகின்றது.
இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, நாடு காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமும் காட்டிக்கொடுப்பு இடம்பெற்றுள்ளது.
கூட்டு எதிரணியாக நாம் நாட்டுக்காக போராடுவோம். இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு எம்மால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வோம்.
அறகலயவில் ஈடுபடமாட்டோம். கட்டிடங்களைக் கைப்பற்றமாட்டோம், கொலைகளில் ஈடுபடமாட்டோம். ஜனநாயக வழியிலேயே செய்வோம். ஆகவே, மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 9 மாகாணங்களிலும் அரசாங்கத்தை மண்டியிடவைப்போம்.” – என்றார் சுகீஸ்வர பண்டார.





