பிரிட்டனுக்குள் பிரிவினையைத் தூண்ட Elon Musk முயற்சி: பிரதமர் Keir Starmer குற்றச்சாட்டு!
அமெரிக்கத் தொழிலதிபர் இலோன் மஸ்க் பிரிட்டனுக்குள் பிரிவினையைத் தூண்ட முயல்கிறார் என்று பிரதமர் கீர் ஸ்டார்மர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரிட்டனின் தெற்கு நகரமான சவுதாம்ப்டனில் Southampton கடந்த டிசம்பர் மாதம் 18 வயதுடைய ஹென்றி நோவாக் என்ற மாணவர், 23 வயதுடைய விக்ரம் திக்வா என்பவரால் கத்தியால் குத்தப்பட்டார்.
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான ஹென்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது கைகளில் விலங்கிட்ட விவகாரம் தற்போது பிரிட்டன் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கைது செய்யப்பட்ட விக்ரம் திக்வா, மாணவர் ஹென்றி தன்னை இனரீதியாக இழிவுபடுத்தியதாக காவல்துறையினரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவத்தைக் கையில் எடுத்துள்ள பிரிட்டனின் தீவிர வலதுசாரி அமைப்புகள், பிரிட்டிஷ் காவல்துறை வெள்ளை இன மக்களையும், சிறுபான்மையின மக்களையும் வெவ்வேறு விதமாக நடத்துகிறது என்பதற்கு இதுவே சாட்சி என்று குற்றம் சாட்டி வருகின்றன.
எனினும், பிரதமர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி (Labour) அரசாங்கமும், காவல்துறை உயர் அதிகாரிகளும் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
‘எக்ஸ்’ சமூக ஊடகத்தின் உரிமையாளரான இலோன் மஸ்க், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அவரது ஒரு பதிவில், “வெள்ளையர்களுக்கு எதிராக இனவெறியுடன் செயல்பட வேண்டும் என்பதுதான் காவல்துறையின் உத்தியோகபூர்வ கொள்கை என்பது மக்களுக்குத் தெரியுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், இந்த வழக்கை காவல்துறை கையாண்ட விதம் குறித்து அவர்களுக்கு எதிராக ஒரு தனியார் வழக்கைத் தொடரத் தான் நிதியுதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் மஸ்க் அறிவித்ததுடன், ஹாம்ப்ஷயர் (Hampshire) காவல்துறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பிரதமர் கீர் ஸ்டார்மர்,
” மஸ்க் கடந்த சில நாட்களாக நமது அரசியலில் தலையிட்டு, பிரிவினையைத் தூண்ட முயற்சிக்கிறார். இது பிரிட்டனின் பண்பாடு அல்ல.
ஹென்றியின் மரணம் போன்ற ஒரு பயங்கரமான சம்பவம் நிகழும்போது, அவரது குடும்பத்தினரைப் போல நாமும் நிதானமாக எதிர்வினையாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
Mobile Phone தொடர்பான தகராறில், 21 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு கத்தியைப் பயன்படுத்தி ஹென்றியைக் குத்திக் கொன்ற குற்றத்திற்காக விக்ரம் திக்வாவிற்கு கடந்த திங்கள்கிழமை நீதிமன்றம் குறைந்தது 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.





