யாழ். முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் விபத்தில் பலி!
வவுனியா, கனகராயன்குளம் – பெரியகுளம் பகுதியில் ஏ – 9 பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வவுனியா – யாழ்ப்பாணம் ஏ – 9 பிரதான வீதியில், கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு இரு இளைஞர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இவர்களின் மீது மோதியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விபத்துக்குள்ளான சொகுசு காரின் பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஹயஸ் ரக வாகனமும் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்த இரு இளைஞர்களும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர், யாழ். மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகனான அற்புதராஜா தர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்ற வவுனியா தடயவியல் பொலிஸார் முதற்கட்ட அறிவியல் சான்றுகளைத் திரட்டியுள்ளதுடன், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





