உலகை மிரட்டும் Ebola வைரஸ்: ஆஸ்திரேலியாவில் பயணக் கட்டுப்பாடு?
இத்தாலி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையிலும், எபோலா பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா பயணக் கட்டுப்பாடுகளையோ அல்லது தனிமைப்படுத்தல் (Quarantine) விதிகளையோ விதிக்காது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
” சர்வதேச அளவில் எபோலா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வந்தாலும், இந்த கட்டத்தில் ஆஸ்திரேலியா பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிடவில்லை.” – என்று ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Mark Butler தெரிவித்தார்.
மேலும் “இது மிகவும் கவலைக்குரிய ஒரு நோய்த்தொற்று பரவலாகும். இது குறித்து தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகளையும், கண்காணிப்புகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
எபோலா பரவலைத் தடுக்க உலக நாடுகள் பலவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகள் தங்களது விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா கடந்த 21 நாட்களில் உகாண்டா, காங்கோ (DRC) அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற ஆஸ்திரேலியர்கள் அல்லாத (அமெரிக்க பாஸ்போர்ட் இல்லாத) பயணிகளுக்கு நுழைவு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் மக்கள் அறிகுறிகள் ஏதும் இல்லாவிட்டாலும் 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கனடா உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், எபோலா பாதிக்கப்பட்ட நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளாத பிற நாடுகள், பயணக் கட்டுப்பாடுகளையோ அல்லது தீவிர பரிசோதனைகளையோ செய்யத் தேவையில்லை என்றே உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கிறது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் (DRC) இதுவரை இந்த எபோலா தொற்றால் 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது.
அங்கு நிலவும் உள்நாட்டு மோதல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக சுகாதாரப் பணியாளர்களால் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளைச் சரியாகச் செய்ய முடிவதில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலியா தனது நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (Centre for Disease Control) ஆலோசனையின்படி நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் உறுதி அளித்துள்ளார்.





