ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் லண்டனில் தீவிரமடையும் கல்வி நெருக்கடி!
கிழக்கு லண்டனின் Waltham Forest பெருநகரப் பகுதியில் உள்ள பள்ளிகளில் தேசிய கல்விச் சங்கம் (NEU) மேற்கொண்டு வரும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் காரணமாக, பெற்றோர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து இருவேறு கருத்துகள் உருவாகியுள்ளன.
கடந்த வாரம் வால்தம்ஸ்டோ நகரில் உள்ள South Grove ஆரம்பப் பள்ளி , ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் மூடப்பட்டது.
பள்ளிகளில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டமைப்பு மறுசீரமைப்பு காரணமாகப் பலருக்கு வேலை இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக, சிறப்புத் தேவையுடைய (Special Educational Needs) குழந்தைகளுக்கான ஆதரவு மற்றும் உதவிகள் குறையும் என்ற அச்சத்தினால் ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆசிரியர்களின் இந்த நடவடிக்கைக்குப் பெற்றோர்களில் ஒரு தரப்பினர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெற்றோர்களும் குழந்தைகளும் இணைந்து வால்தம்ஸ்டோ நகர சபைக்கு வெளியே தங்களின் எதிர்ப்பை ஊர்வலமாகப் பதிவு செய்தனர்.

“ஆசிரியர்கள் தங்களின் வேலை மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக இந்த முடிவை எடுப்பது கடினம் என்பதை நாங்கள் அறிவோம்.
ஆனால், அவர்கள் எங்களது குழந்தைகளுக்காகவும், பள்ளியின் எதிர்காலத்திற்காகவும் துணிச்சலுடன் நின்று போராடுகிறார்கள்.” என்று பெற்றோர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளையில், லண்டனில் தொடர்ந்து நீடித்து வரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டங்கள் தங்களின் குழந்தைகளின் கல்வியைப் பாதிப்பதாகப் பெற்றோர்களின் மற்றொரு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.
வேலைக்குச் செல்லும் தங்களுக்கு இது பெரும் சுமையாக மாறுவதாகவும், தொடர் விடுமுறைகளால் குழந்தைகள் கற்றல் திறனை இழப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதன் வெளிப்பாடாக, அண்மையில் ‘கனாட்’ (Connaught) பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலர் வேலைநிறுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி மாற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய கல்விச் சங்கத்தின் (NEU) தரவுகளின்படி, நடப்பு கல்வி ஆண்டில் வால்தம் பாரஸ்ட் பகுதியில் மட்டும் 13 பள்ளிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
“லண்டனில் நிலவும் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் அதிகப்படியான வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாகப் பல குடும்பங்கள் நகரை விட்டு வெளியேறி வருகின்றன.
இதனால் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து, நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.” – என்று தொழிற்சங்க தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




