இலங்கை செய்தி

‘படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கவும்’ – யாழில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை!

பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைந்து விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

வடக்கு மாகாணத்துக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (26.05.2026) செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் களப்பயணம் மேற்கொண்டு காணி விடுவிப்புத் தொடர்பான நேரடி ஆய்வுகளை முன்னெடுத்தனர்.

இந்த ஆய்வுகளின் பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் காணி விடுவிப்புத் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

அமைச்சர் இ.சந்திரசேகர், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ளுநர் நா.வேதநாயகன் மற்றும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இவர்களுடன் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய கௌரவ ஆளுநர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய ‘மக்களின் காணிகள் மக்களுக்கே’ என்ற உறுதிமொழிக்குச் செயலுரு கொடுக்க வேண்டியது அதிகாரிகளாகிய அனைவரினதும் பொறுப்பாகும் என வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் இ.சந்திரசேகர், காணி விடுவிப்புத் தொடர்பில் மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும், எனவே விடுவிக்கக்கூடிய காணிகளை விரைந்து விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர,

“படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மிகவும் தீவிரமான அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.

படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதிலும், படையினர் வசமுள்ள ஆனால் பயன்படுத்தப்படாத காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதிலும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளார்’ எனத் தெரிவித்தார்.

அத்துடன், ‘சில குறிப்பிட்ட காணிகளை விடுவிப்பதானது சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தீர்மானங்களிலேயே தங்கியுள்ளது.

எனவே, அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், துறைசார் செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளை உள்ளடக்கிய விசேட உயர்மட்டக் கூட்டமொன்று மிக விரைவில் ஏற்பாடு செய்யப்படும்’ எனவும் பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.

இதன் பின்னர் இடம்பெற்ற திறந்த கலந்துரையாடலில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர்கள் தமது நிலைப்பாடுகளைத் தெளிவாக முன்வைத்தனர்.

அத்துடன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரும் தமது துறைசார்ந்த காணிகளின் விடுவிப்புத் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரால் யாழ். மாவட்டக் காணி விடுவிப்புத் தொடர்பான பல்வேறு தரவுகள் சபையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய வீதிகள், வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பல இடங்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டுக் கலந்துரையாடப்பட்டது.

அவற்றில் உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தேசிய பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் குறிப்பெடுத்துக்கொண்டார்.

வலிகாமம் வடக்கு பகுதியில் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளின் அவசியம் வலியுறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு அமைச்சு அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தளபதி சபையில் அறிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!