நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனையின் 11 ஊழியர்கள் பணிநீக்கம்!! காரணம் என்ன?
கடந்த 2023 ஆம் ஆண்டு நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவப் பதிவுகளை முறையற்ற முறையில் அணுகியதற்காக, நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனையின் 11 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 14 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் 03 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
விசாரணைகளின்போது மருத்துவப் பதிவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. இதன் விளைவாக 11 பணிநீக்கங்கள், 12 இறுதி எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகள் மற்றும் இரண்டு முதல் எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்த முறையற்ற அணுகலில் ஈடுபட்ட ஊழியர்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற பதிவுசெய்யப்பட்ட மருத்துவ வல்லுநர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





