மெல்போர்னில் பயங்கரம்: மதுக்கடைக்கு தீவைக்க முயன்ற சிறார்கள் கைது!
மெல்போர்னில் உள்ள மதுக்கடைமீது ஒரு மாதத்திற்குள் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட தீவைப்பு தாக்குதல் முயற்சியை தொடர்ந்து, 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 4:45 மணியளவில், பிளிண்டர்ஸ் லேனில் (Flinders Lane) உள்ள ‘பார் பாம்பி’ (Bar Bambi) உணவகத்திற்கு வெளியே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற கியா (Kia) ரக கார் ஒன்றைக் கவனித்தனர்.
அந்த காரிலிருந்து இறங்கிய இரண்டு சிறார்கள் கையில் எரிபொருள் நிரப்பப்பட்ட கேனுடன் (Jerry can) உணவகத்தை நோக்கி ஓடியுள்ளனர்.
அவர்கள் மதுக்கடையின் ஜன்னல் ஒன்றை உடைத்து, உள்ளே எரிபொருளை ஊற்ற முயன்றபோது, அங்கிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்த முயற்சியின்போது காரை ஓட்டி வந்த மூன்றாவது நபர், காரை எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். தப்பியோடிய ஓட்டுநரையோ அல்லது அந்த காரையோ காவல்துறையினர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
கைது செய்யப்பட்டவர்கள் கேசி (Casey) மற்றும் மோனாஷ் (Monash) பகுதிகளைச் சேர்ந்த 16 வயது சிறுவர்கள் ஆவர். இவர்களிடம் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களில் ‘பார் பாம்பி’ உணவகம் குறிவைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.




