மஹிந்த நாளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமேஜ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை காலை 9.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், சில சட்ட ரீதியான விடயங்கள் குறித்து கலந்துரையாட வேண்டியுள்ளதால், இன்று மாலை சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் இது தொடர்பில் ஆலோசிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்துக்கமைய மஹிந்தவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த வாக்குமூலம் அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டது என கபில சந்திரசேன நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி மனோஜ் கமேஜ், இந்த நிலையில் அழைப்பு விடுக்கப்படுவது பாரதூரமான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சட்டவிரோத வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்படுமானால், தொடர்புடைய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என்ற போதிலும் சில சட்ட ரீதியான காரணிகளை கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது” என சட்டத்தரணி மனோஜ் கமேஜ் மேலும் தெரிவித்துள்ளார்.





