ஈரானுக்கு உதவும் நாடுகள் மற்றும் தனிநபர்கள் மீது பொருளாதாரத் தடை!
ஈரான் ஆயுதங்கள் உற்பத்தி செய்ய உதவிய நாடுகள், தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இதற்கமைய சீனா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த பல நிறுவனங்கள் உட்பட 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க கருவூலம் நேற்று பொருளாதாரத் தடைகளை அறிவத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ள நிலையில் புதிய தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அமெரிக்க கரூவூலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் இராணுவத் தொழில் தளத்திற்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்கள் உட்பட, சட்டவிரோத ஈரானிய வர்த்தகத்தை ஆதரிக்கும் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சீனாவின் சுதந்திரமான “டீபாட்” எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் உட்பட, ஈரானின் முயற்சிகளுக்கு உதவும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மீது இரண்டாம் நிலைத் தடைகளை விதிப்பதாகவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே கருவூலத்தின் நடவடிக்கைகள், ஹோர்முஸ் ஜலசந்தியில் இயங்கும் கப்பல்களையும் பிராந்திய நட்பு நாடுகளையும் அச்சுறுத்தும் ஈரானின் திறனைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.





