உயிர் அச்சுறுத்தல் : நிலத்தடி பதுங்குக் குழியில் புட்டின் தங்க ஏற்பாடு!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படுகொலை அச்சம் காரணமாக மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், கிராஸ்னோடார் (Krasnodar) பகுதியில் வாரக்கணக்கில் தங்கும் வகையில் ஒரு பதுங்குக் குழி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் மெய்க்காப்பாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் போன்ற பணியாளர்களை முழுமையான சோதனைக்கு உட்படுத்துவதும், அவர்களின் தனிப்பட்ட சாதனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புட்டினின் இல்லத்தை உக்ரைன் படைகள் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகின்ற நிலையில் இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை “பயங்கரவாத அச்சுறுத்தல்” மற்றும் உக்ரைனின் வெற்றிகரமான நீண்ட தூரத் தாக்குதல்களுக்கு மத்தியில் ஆபத்தைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





