இலங்கை செய்தி

தையிட்டி பிரச்சினையை நிதானமாகவே கையாள்வோம்: ஆளுங்கட்சி எம்.பி.

” தையிட்டி விகாரைப் பிரச்சினையை நிதானமாகவே கையாள வேண்டும். தென்பகுதியில் இருக்கும் இனவாத அரசியல்வாதிகளுக்கு புது இரத்தத்தை பாய்ச்சுவதாக இந்தப் பிரச்சினை அமைந்து விடக்கூடாது.”- என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.

தையிட்டி பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“தையிட்டி திஸ்ஸ விகாரையைச் சூழவுள்ள காணிகளை விடுவிக்கும் முகமாக மூன்று அமைச்சர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் எமது அரசாங்கத்தால் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டன.

அன்றைய தினம் மக்களுக்கு இருந்த சந்தேகங்கள் காரணமாக காணிகளை அளவீடு செய்ய முடியாமல் போனது. ஆனாலும் அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் மக்களுக்கு மீள நம்பிக்கையளித்து மீளக் காணிகளை அளப்பதற்கான முழு ஏற்பாடுகளையும் கடந்த வாரம் மேற்கொண்டிருந்தனர். எனினும் அது தடைப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரை பிரச்சினையானது எங்களுடைய ஆட்சிக் காலத்தில் உருவான பிரச்சனையல்ல. முன்னைய ஆட்சியாளர்களுடைய காலத்தில் பொது மக்களுடைய காணியில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய அரசாங்கம் அந்த மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான வெற்றித் தருவாயில் இருக்கும் போது சிலர் அதனை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி குழப்புகின்றனர்.

தையிட்டி விகாரைப் பிரச்சினையை நிதானமாகவே கையாள வேண்டும். தென்பகுதியில் இருக்கும் இனவாத அரசியல்வாதிகளுக்கு புது இரத்தத்தை பாய்ச்சுவதாக இந்தப் பிரச்சினை அமைந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

ஆனால் தையிட்டி விகாரை பிரச்சனையை வைத்து தென்னிலங்கையில் உள்ள இனவாதிகளை மீளவும் இயங்கு நிலைக்கு
கொண்டுவர இங்கிருக்கும் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது.

தையிட்டி திஸ்ஸ விகாரையைச் சூழ உள்ள காணிகளை நில அளவை செய்து மக்களிடம் ஒப்படைப்பதற்கே நாங்கள் தீர்மானித்துள்ளோம். சுவீகரிக்கும் நோக்கத்தோடு நாங்கள் நில அளவைகளை மேற்கொள்ளவில்லை.

சுவீகரிக்கும் நோக்கத்தோடு நாங்கள் செயற்படுவோமாக இருந்தால் தமிழ் மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழப்பார்கள்.

சிலர் தங்களுடைய அரசியலுக்காக இந்த விகாரைப் பிரச்சினையை தீராத ஒரு பிரச்சினையாக வைத்திருப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இதுவே நிதர்சனமான உண்மை.

காணி உரிமையாளர்கள் ஒரு கடிதத் தலைப்பில் அனைத்து அரச அதிகாரிகளும் கையெழுத்திடுமாறு கோருகின்றார்கள்.

ஆனால் நடைமுறைப்படி அரச உத்தியோகத்தர்கள் அவ்வாறு ஒரு கடிதத் தலைப்பில் கையெழுத்திட முடியாது.

எனினும் அரச உத்தியோகத்தர்கள் ஒரு கடிதத்திலே தங்களுடைய கையொப்பத்தினை இட்டு பிரதேச செயலாளருடைய உத்தியோகபூர்வ முத்திரையையும் பதித்து காணி உரிமையார்களிடம் வழங்கியிருந்தார்கள்.

ஆனால் அதனை காணி உரிமையாளர்கள் நம்பவில்லை. எழுத்து மூல கடிதத்தை விட நம்பிக்கையே பலமானது.

காணிகளை அளந்து சுவீகரித்து விகாரைக்கு வழங்குவோமாக இருந்தால் எங்களுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ் மக்களுமே போராடுவார்கள் என எங்களுக்கு தெரியும். விகாரை அமைக்கப்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய காணிகள் அனைத்தையும் மக்களுக்கு மீள ஒப்படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் பவானி வீதிக காணப்படுகின்றது. அதனை விடுவிக்கும் முகமாக காணிகளை அளவீடு செய்த குழுவினர் குறித்த வீதியையும் அளவீடு செய்து இருந்தார்கள்.

இதனை முன்கூட்டியே அறிந்த அரசியல்வாதிகள் சிலர் குழப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பவானி வீதியைத் துரிதமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை வரும் நாள்களில் மேற்கொள்வோம்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!