டெல்லி அணி அபார வெற்றி!
IPL 2026 தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் Delhi Capitals அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய Rajasthan Royals அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது.
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (4) மற்றும் யஷஸ்வி ஜெய்சவால் (6) ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும், அணித் தலைவர் ரியான் பராக் (90 ஓட்டங்கள், 50 பந்துகள்) மற்றும் துருவ் ஜூரெல் (42) ஜோடி 102 ஓட்டங்களைப் பெற்று அணியை மீட்டனர்.
இறுதி நேரத்தில் டோனோவன் பெரைரா வெறும் 14 பந்துகளில் 47 ஓட்டங்கள் (6 சிக்ஸர்கள்) விளாச, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 225 ஓட்டங்களைப் பெற்றது.
226 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் மற்றும் பெதும் நிஸங்க ஜோடி அசுர வேகத் தொடக்கம் அளித்தது.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவர்களில் 110 ஓட்டங்களை சேர்த்தது. பெதும் நிஸங்க 33 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் கே.எல். ராகுல் 40 பந்துகளில் 75 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) குவித்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்.
நடுவரிசையில் நிதிஷ் ராணா (33) அதிரடி காட்ட, கடைசி ஓவர்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (18) மற்றும் அசுதோஷ் சர்மா (25) ஜோடி நிதானமாக விளையாடி இலக்கை எட்டினர்.
டெல்லி அணி 19.1 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.





