ஸ்பெயின் பிரதமருக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு!
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) காட்டிய கடுமையான எதிர்ப்பின் மத்தியில், ஸ்பெயினின் ஆளும் சோசலிஸ்ட் கட்சி பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.
அதே நேரத்தில், இந்தத் தாக்குதலை ஆதரிக்கும் தீவிர வலதுசாரிக் கட்சியான வோக்ஸ், சரிவைச் சந்தித்துள்ளது என்று திங்களன்று வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தப் போரைக் கடுமையாக விமர்சிக்கும் மிகவும் வெளிப்படையான மேற்கத்தியத் தலைவர்களில் ஒருவராக சான்செஸ் உருவெடுத்துள்ளார்.
அவர், இந்தத் தாக்குதல்களில் ஈடுபடும் அமெரிக்க விமானங்களுக்கு ஸ்பெயின் வான்வெளியை மூடியதுடன், தெற்கு ஸ்பெயினில் கூட்டாக இயக்கப்படும் இராணுவத் தளங்களைப் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் MAGA இயக்கத்துடன் நெருங்கிய கூட்டணி வைத்துள்ள வோக்ஸ் கட்சி, சான்செஸின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகள், 85 சதவீதமானோர் போருக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரம் சிக்மா டோஸ் நிறுவனம் இன்று நடத்திய புதிய கருத்துக்கணிப்பில், சான்செஸின் சோசலிஸ்டுகளுக்கான ஆதரவு கடந்த மாதம் 26.4% ஆக இருந்த நிலையில் இருந்து 27.7% ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இது பழமைவாத மக்கள் கட்சியின் (PP) முன்னிலையைக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





