உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி எங்கே – அரசாங்கத்திடம் சஜித் கேள்வி
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும் என அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், கடந்த கால மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படாமை ஒரு தேசமாக நாம் அடைந்த பாரிய தோல்வியென்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டார்
உண்மை கண்டறியப்படுவதும், நீதியை உறுதிப்படுத்துவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். சட்டத்தின் ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பேணுவது அரசாங்கத்தின் கடமையாகும்.
இவ்வாறான துயரங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே நம்பிக்கையையும்
அமைதியையும் கட்டியெழுப்புவது அவசியமானது.
பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதுடன், உண்மை மற்றும் நீதிக்கான கூட்டு அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.





