காமராஜரை டெல்லியிலுள்ள வீட்டில் கொலை செய்ய முயற்சி – ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
முன்னாள் முதலமைச்சர் காமராஜரை டெல்லியில் உள்ள வீட்டில் வைத்து சங்கிக் கூட்டம் எரித்துக் கொல்ல முயற்சி செய்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
விருதுநகர் அருகே சத்திரரெட்டியாபட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர் , திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளரான அமைச்சர் தங்கம் தென்னரசுவை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரனை தனது ஆருயிர் தம்பி என்று முதலமைச்சர் அழைத்தார்.
இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டத்தை கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மட்டும் சோகமாக உள்ளதாக விமர்சித்தார்.
பணத்திற்கு பதிலாக கூப்பன் தருவதால், மக்கள் வேண்டிய பொருளை வாங்கிக் கொள்வார்கள் என்று கூறிய முதலமைச்சர், இந்தத் திட்டத்தில் எப்படி கமிஷன் அடிக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வியெழுப்பினார்.
மேலும், அரசு ஊழியர்களின் வாக்குகள் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்காது என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
திமுகவை போல் சாதனைகள் எதையும் சொல்ல முடியாமல் அவதூறுகளையும், தரம் தாழ்ந்த பேச்சுகளையும் நம்பி பழனிசாமி பரப்புரை செய்கிறார் என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அத்துடன் “துரோகத்திற்குஉருவம் கொடுத்தால் அது பழனிசாமிதான்” என விருதுநகரில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அத்துடன் பழனி சாமி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொடுமைப்படுத்தி, அவர்களுக்கு தரும் ஊதியத்தையும் இழிவுபடுத்தியுள்ளார் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிகள் பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.





