இலங்கை செய்தி

‘அரசியல் தீர்வு திட்டம்’: தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்க இணக்கம்!

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தீர்மானித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இரு தரப்புக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் இது மூன்றாவது சந்திப்பாகும். இரு தரப்புக்கும் இடையே தொடர்ச்சியான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்காக 9 பேர் கொண்ட ‘இணைப்புக் குழு’ ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளோம்.

இந்தக் குழுவில் தமிழரசுக் கட்சியின் சார்பில் நானும் (எம்.ஏ.சுமந்திரன்), தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் ஆகிய மூவர் அங்கம் வகிப்போம்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் 6 பிரதிநிதிகள் இணைக்கப்படுவர். இந்த ஒன்பது பேர் கொண்ட குழுவே இரு தரப்புக்கும் இடையிலான அரசியல் நகர்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும்.

அத்துடன் மாதந்தோறும் இவ்வாறான சந்திப்புகளை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாகச் சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் எமது இரு தரப்பினரும் கலந்துகொண்டோம்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படைக் கோட்பாடுகளை வரையறுப்பதுடன், அது சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான ஒரு ‘சமூக ஒப்பந்தமாக’ அமைய வேண்டும் என்பதில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கான வரைவைத் தயாரிக்கும் பணிகள் சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எரிபொருள் நெருக்கடி காரணமாகப் பிற்போடப்பட்ட இதற்கான அடுத்தகட்டக் கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடனும் இணைந்து, ஒருமுகப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பதற்கான முயற்சிகளில் முழுமையாக ஈடுபட இன்றைய கூட்டத்தில் தீர்மானித்துள்ளோம்.

தமிழ்த் தரப்புகள் சிதறி நிற்காமல், ஒருமித்த குரலில் அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்கான நடைமுறைகளை முன்னெடுப்போம்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!