ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்
ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈரானின் தெற்கு துறைமுக நகரில் அமைந்துள்ள குறித்த வானொலி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களில் 214 சிறுவர்களும் அடங்குவர் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரான், அமெரிக்காவை எச்சரித்ததோடு, ஹர்முஸ் நீரிணையை ஜலசந்தியை முழுமையாக மூடுவதாகவும் அறிவித்துள்ளது.
ஈரானின் எரிசக்தி வசதிகள் தாக்கப்பட்டால், ஹர்முஸ் நீரிணையை முற்றிலுமாக மூடிவிடுவோம் என்று புரட்சிகர காவலர்கள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா ஈரானிய எரிசக்தி நிலையங்களைத் தாக்கினால், அமெரிக்கப் பங்குகளைக் கொண்ட நிறுவனங்களையும் தளங்களையும் முற்றிலுமாக அழித்துவிடுவோம் என்று புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
நாங்கள் போரைத் தொடங்கவில்லை என்றும், எதிரி நமது மின் நிலையங்களைச் சேதப்படுத்தினால், நமது நாட்டின் மற்றும் மக்களின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




