இலங்கை செய்தி

நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது

நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உச்சகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக அவர் இன்று (17) இரவு 7.30 க்கு
விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“உலகளாவிய ரீதியில் யுத்தம் எந்த எல்லைக்குச் சென்றாலும், இலங்கை தனது நடுநிலை கொள்கையிலிருந்து தவறாது.
சர்வதேச அளவில் சில எரிபொருள் வழங்குநர்கள் கப்பல்களை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள போதிலும், நட்பு நாடுகளுடன் முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஊடாகச் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து புதிய விநியோகஸ்தர்களுக்குக் கொள்வனவு கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளன.
குறிப்பாக, டொலர்களில் வருமானம் ஈட்டும் தனியார் ஏற்றுமதித் தொழில்துறை மற்றும் சுற்றுலா துறை சங்கங்களின் கோரிக்கைக்கு அமைய அவர்களுக்கு தேவையான எரிபொருளை அவர்களே இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் தனியார் துறை மூலம் சுற்றுலாத்துறைக்கும் இந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்குமான எரிபொருள் வழங்கப்படும்.

அதேநேரம், நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என உறுதியளித்த ஜனாதிபதி, மார்ச் மாதத் தேவையான 330,000 டன்களுக்கு மேலதிகமாக 380,000 டன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் 33,000 டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாளை அல்லது நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது.
அத்துடன், சுகாதார சேவை, விமான நிலையம் மற்றும் துறைமுகம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காகப் பாதுகாப்பு எரிபொருள் இருப்புகளைப் (Buffer Stocks) பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெருந்தோட்டத் துறையில் தேயிலைத் தோட்டப் பயன்பாடுகளுக்கு QR முறைமையின் கீழ் வழங்கப்படும் ஒதுக்கீடு போதாதெனில், அவர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்கப்படும். உணவு விநியோக வலையமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அத்தியாவசிய உணவு மற்றும் மரக்கறி விநியோகஸ்தர்களுக்கான எரிபொருள் விநியோகமும் உறுதிப்படுத்தப்படும்.

அதேநேரம், அரசாங்கத்தின் எரிபொருள் பாவனையைக் குறைந்தபட்சம் 25 சதவீதத்தினால் குறைக்கும் நோக்கில், அரச பணியாளர்களுக்கு வாராந்தம் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“நாட்டில் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் எவரும் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!