‘மத்திய கிழக்கு போர்ச்சூழல்’: ஜனாதிபதி தலைமையில் கூடியது பொருளாதார கண்காணிப்புக் குழு!
பொருளாதார கண்காணிப்புக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் , நேற்று (12) பிற்பகல் கூடியது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இந்நாட்டு சந்தை நிலைமையை ஸ்தீரப்படுத்தல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கை குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், கடந்த குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட பலரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.





