இலங்கை செய்தி

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அரசாங்கம் உத்தரவு

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16 ஆவது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் , ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பல்வேறு பொறுப்புகள் மற்றும் திட்டங்கள் உள்ளதாகவும் அந்த அனைத்து நிறுவனங்களும் இந்தத் தருணத்தில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணப் பணிகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அனைத்து நிறுவனங்களும் ஒரே நோக்கத்திற்காக, ஒரு கட்டமைப்பாகச் செயற்பட்டு, சரியான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரணத்தை வழங்க முடியும் எனத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், இதற்காகத் துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான மற்றும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காகப் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைக்குப் பின்னர், அவர்களின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய வீடுகளை விரைவாகக் கட்டி முடிப்பது தொடர்பாகவும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.

இந்த வீட்டுத் திட்டப் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருடன் விசேட கலந்துரையாடலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை விரைவாக வழங்கி முடிக்குமாறும், இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்காத மக்களின் மேன்முறையீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியின் செயலாளர் அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொத்தா, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குமுதுலால் போகஹவத்த, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!