இலங்கை செய்தி

நாளை திருமலை வருகிறது “தரங்கிணி”!

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான “தரங்கிணி” (INS Tarangini) எனும் பாய்மரப் பயிற்சி கப்பல் நாளை (27) திருகோணமலை அஷ்ரப் முனையத்தை வந்தடைய உள்ளது.

இயந்திரம் மற்றும் எரிவாயு விசையாழியைக் (Gas Turbine) கொண்ட பாய்மரப் பயிற்சி கப்பல்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உலக கடற்படைகளிடம் உள்ளன.

அந்தவகையில் இந்திய கடற்படை இத்தகைய பாய்மரப் பயிற்சி கப்பலைத் தன்வசம் வைத்திருப்பது கடற்படைத் துறையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

இந்தப் பாய்மரப் பயிற்சி கப்பல் இந்திய கடலோர காவல்படையினருக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படும் ஒரு கப்பலாகும்.

உலகப் புகழ்பெற்ற கப்பல் வடிவமைப்பாளரான கொலின் மூட் என்பவரால் இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் இந்தப் பாய்மரக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் எஃகு மேலோட்டைக் (Steel hull) கொண்டதுடன், அலுமினியம் மற்றும் தேக்கு மரத் தட்டுகளால் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தரங்கிணி என்பது ஒரு இந்திப் பெயராகும், அதன் பொருள் அலை என்பதாகும்.

உலகெங்கிலும் கடல் பயணங்கள் ஊடாக நட்புறவுப் பாலங்களை கட்டியெழுப்பும் இந்திய கடற்படையின் இராஜதந்திர முயற்சிகளில் இந்த தரங்கிணி பாய்மரக் கப்பல் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது.

பயிற்சி பெறும் கடற்படையினர் கடல் மற்றும் காற்றின் தன்மைகளைப் புரிந்துகொள்வதற்காக இக்கப்பலை இந்திய கடற்படை தற்போது பயன்படுத்தி வருகின்றது.

திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடையும் இந்தப் பாய்மரப் பயிற்சி கப்பலில் ஏழு அதிகாரிகளும் முப்பத்தி மூன்று மாலுமிகளும் அடங்கிய பணியாளர்கள் குழு உள்ளது.

மார்ச் 2 ஆம் திகதி வரை திருகோணமலையிலும், மார்ச் 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்திலும் தங்கியிருக்கும் இக்கப்பல் நங்கூரமிடப்பட்டிருக்கும்.

இக்காலப்பகுதியில் துறைமுகக் கட்டம் மற்றும் கடல் கட்டம் ஆகிய இரு கட்டங்களாக இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் பயணப் பயிற்சி மற்றும் அனுபவங்களை வழங்கும்.

இந்திய பாய்மரப் பயிற்சி கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் நிதின் கஜ்ஜர் (Commander Nitin Gajjar) செயற்படுகிறார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!