இலங்கையில் ஆடை தரக் கண்காணிப்பு மையங்களை நேரில் ஆய்வு செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க (Chathuranga Abeysinghe) ஆகியோர், கொழும்பில் அமைந்துள்ள ஆடை களஞ்சியம் மற்றும் தரக் கண்காணிப்பு மையங்களை நேரில் பார்வையிட்டனர்.
பிரித்தானியாவுக்கான ஏற்றுமதி பொருட்களின் தயாரிப்பு மற்றும் தரநிலைகள் தொடர்பாகவும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
2026 ஜனவரி முதலாம் ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்துக்கமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
மேலும் கொழும்பில் செயல்படும் தர உறுதி நிலையமொன்றையும் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
இந்தநிலையம், பிரித்தானிய நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் ஆடைகளின் தரத்தைச் சரிபார்த்து சான்றளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
புதிய சலுகைகள் மூலம் இலங்கை உற்பத்தியாளர்கள் உலகளாவிய சந்தையில் இருந்து மூலப்பொருட்களைப் பெறுவதற்கும், பிரித்தானிய சந்தைக்கு வரியில்லா அணுகலைத் தொடர்ந்து பேணுவதற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் இலங்கையின் முன்னணி ஆடை ஏற்றுமதி நிலையை மேலும் உறுதிப்படுத்தும் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தி, நீண்டகால பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான தூண்டுகோலாக அமையும் என்றும் உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது
புதிய வரியில்லா சலுகைகள் உற்பத்தி விரிவாக்கத்தையும், 10 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.





