கூகுள் CEO சுந்தர் பிச்சை – பிரதமர் மோடி சந்திப்பு!
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை Google CEO Sundar Pichai, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக Artificial Intelligence Impact Summit சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையிலேயே கூகுள் நிறுவனத்தின் உயர்மட்ட பிரமுகர்கள் சகிதம் அவர், பிரதமரை சந்தித்து கலந்துரையாடினார்.
ஏ.ஐயில் இந்தியா செய்து வரும் பணிகள் மற்றும் இந்தத் துறையில் நமது திறமையான மாணவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கூகிள் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும் என்பது குறித்து விவாதித்தோம் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சி மாநாடு தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி,
‘‘இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை நாட்டின் சேவை மற்றும் ஏற்றுமதிக்கு முதுகெலும்பாகவும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாகவும் இருந்து வருகிறது.
இந்த துறைக்கு செயற்கை நுண்ணறிவு ஒரு மகத்தான சவாலையும் வாய்ப்பையும் முன்வைக்கிறது.
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அவுட்சோர்சிங் அலைகளால் இந்தியாவின் ஐடி துறை 2030-ம் ஆண்டுக்குள் 400 பில்லியன் டாலர்களை எட்டும் என்று ஏஐ சந்தை கணிப்புகள் தெரிவிக்கின்றன’’ என தெரிவித்துள்ளார்.





