சுயாட்சி அம்சங்களுடன் புதிய அரசமைப்பு வேண்டும்: தமிழ்க் கட்சிகள் தீர்மானம்!
தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது என்று யாழ்ப்பாணத்தில் Jaffna நேற்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் Tamil National Council ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தற்போதைய அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள, 2015 – 2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசமைப்பு முறையை அடியோடு நிராகரிப்பதாக இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரும் உறுதியாகத் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்வே எட்டப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Gajendrakumar Ponnambalam,
” கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் தரப்புகள் மற்றும் அமைப்புகளைக் கொண்ட ஒரு ‘பொதுச் சபை’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து ஒரு விசேட ‘அரசியல் குழு’ அமைக்கப்படும். இக்குழுவானது திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில், தமிழ் மக்கள் சுயாட்சியை முழுமையாக அனுபவிக்கக்கூடிய அரசமைப்பு யோசனைகளைத் தயாரிக்கும் பணியை முன்னெடுக்கும்.
முக்கியமாக, தமிழ் மக்கள் பேரவையால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனைகள் பெறப்படும்.
மேலதிகமாக ஏனைய தரப்புகளிடம் உள்ள சிறந்த யோசனைகளும் உள்வாங்கப்பட்டு, ஒரு பொதுவான வரைவு தயாரிக்கப்படும். இந்த வரைவு மீண்டும் பொதுச் சபையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் மக்கள் மட்டத்துக்குக் கொண்டு செல்லப்படும்.” – என்றார்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் எதிர்காலத்தில் இந்த முயற்சியில் இணைய விரும்பினால் அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கும்.
அனைவரையும் அரவணைத்துத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





