டெல்லி விஜயத்தின்போது பிரான்ஸ் ஜனாதிபதியை சந்திக்க அநுர திட்டம்!
இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு AI Impact Summit டெல்லியில் நாளை ஆரம்பமாகின்றது.
எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் உச்சி மாநாட்டில் அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்பார் என தெரியவருகின்றது.
எனினும், டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய தலைமையிலான உயர்மட்டக் குழு நாளைய அமர்வில் பங்கேற்கும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இந்த உச்சிமாநாட்டில் பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் ஏ.ஐ. உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாக, உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி பல இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.




