மாணவர் எழுச்சிக்கு பிந்தைய முதல் தேர்தல் – பங்களாதேஷில் வாக்குப்பதிவு நிறைவு
2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான போராட்டங்களால் 15 ஆண்டுகள் நீடித்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
மக்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்வு செய்ய வாக்களித்ததுடன், அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் முன்மொழிவிற்கான வாக்கெடுப்பிலும் பங்கேற்றனர்.
இதற்கமைய அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில், மாணவர் எழுச்சியிலிருந்து உருவான கட்சியுடன் கூட்டணி அமைத்த பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.
மாணவர் போராட்டங்களின் போது சுமார் 1,400 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டங்களை ஒடுக்க நேரடியாக உத்தரவிட்டதாக ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால், அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இதனிடையே, ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு இந்தத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தற்போது நாட்டை வழிநடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





