“அரசியல் லாபத்துக்காகவே கடந்த காலங்களில் வீதி அபிவிருத்தி”
“கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர்.”
ஆனால், தற்போதைய அரசாங்கமே மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து வீதிகள், பாலங்கள் மற்றும் இறங்குதுறைகளை அபிவிருத்தி செய்து வருகின்றது.”
இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
” மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு, இன்று (11.02.2026) காலை அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வரி நீங்கலாக சுமார் 680 மில்லியன் ரூபா மதிப்பீட்டில், 6.03 கிலோ மீற்றர் நீளத்துக்கு இவ்வீதி முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது.
துரித கதியில் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வீதிப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 12.05.2027 அன்று மக்கள் பாவனைக்காக மீளக் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு ஆளுநர் தனது உரையில் கூறியவை வருமாறு,
“ அமைச்சர் பிமல் ரத்நாயக்க வடக்கு மக்கள் மீது விசேட கரிசனையுடையவர். அவர் கடந்த காலத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே, எமது மக்களின் துயரங்களை அறிந்தவர்.
நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய அக்காலப்பகுதியில், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மக்களுக்கும் நிதி ஒதுக்கியிருந்தார்.
அந்தளவு தூரம் எமது மக்கள் தொடர்பில் அக்கறை கொண்டவர்.
எனவே, அவர் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக உள்ள இக்காலத்தில், எமது மாகாணத்தின் அபிவிருத்திகளைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
இவ்வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும், என்றார்.





