கிவுல் ஓயாத திட்டத்தில் உள்நோக்கம் எதுவும் கிடையாது: அரசு விளக்கம்!
“கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்தை Kivul Oya project அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வாக்குவேட்டை நடத்துவதற்கு சிலர் முற்படுகின்றனர். எனினும், அத்திட்டத்தில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது கிவுல்ஓயா திட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் விவசாயத்துக்குரிய நீர்பாசன பிரச்சினையை தீர்ப்பதற்குரிய அத்தியாவசிய வேலைத்திட்டமாகவே கிவுல்ஓயா அபிவிருத்தி திட்டம் இனங்காணப்பட்டுள்ளது.
இது எமது அரசாங்கம் இனங்கண்ட வேலைத்திட்டம் அல்ல. 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையிலேயே கிவுல்ஓயா திட்டத்தை செயல்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
4 வருடங்களுக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எனினும், திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. கொரோனா, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் தடை ஏற்பட்டுள்ளது.
15 வருடங்களுக்கு முன்னர் அத்தியாவசிய வேலைத்திட்டம் என அடையாளப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக தேசிய நிதியே பயன்படுத்தப்படும்.
2026 இல் ஆரம்பிக்கப்பட்டு 2030 இல் இறுதிபடுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். ஆன்று 4 ஆயிரம் மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டது. தற்போது செலவீனம் 6 மடங்காக அதிகரித்துள்ளது.
இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு நாம் தயாராகிவருகின்றோம். இன அடிப்படையில் நீர் வழங்கப்படுவதில்லை. மக்களுக்கு குடிப்பதற்கு, விவசாயம் செய்வதற்கு உட்பட நாளாந்த பணிகளுக்கு நீர் தேவைப்படுகின்றது.
இதனை செய்யும்போது அதில் அரசியலை புகுத்தி, பிரச்சினையை உருவாக்குவதற்கு முற்படவேண்டாம். இத்திட்டத்தின் பின்னணியில் வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை.” – என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறினார்.





