கம்பி வலையில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு!
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தில் சிறுத்தைப் புலியின் சடலம் இன்று (10) மீட்கப்பட்டுள்ளது.
கம்பி வலையில் சிக்கியே சிறுத்தை உயிரிழந்துள்ளது என நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுத்தைப்புலி (09) ஆம் திகதி இரவு கம்பி வலையில் சிக்கியதாகவும், தப்பிக்க முயன்ற போது அதன் கழுத்துப் பகுதி கம்பியில் இறுகப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலியொன்று உயிரிழந்துள்ளதாக தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகம் மூலமாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை பரிசோதித்த பொகவந்தலாவ பொலிஸார், அதே பகுதியிலேயே தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மேலும் பல கம்பி வலைகளை கண்டுபிடித்து அவற்றை அகற்றியுள்ளனர்.
சிறுத்தையின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கம்பி வலைகளை போட்ட சந்தேகநபர்களை கைது செய்ய பொகவந்தலாவ பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.





