டிட்வா – இலங்கை பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக ஐ.நா தகவல்
டிட்வா புயல் காரணமாக நாடு தற்போது பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக சேதங்கள் குறித்து வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, கடந்த வருடம் டிசம்பர் மாத்தில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரியது.
இதன் மூலம், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 06 இலட்சத்து 58 ஆயிரம் பேருக்கு உதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை, இந்த திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 16 ஆயிரம் பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 68 உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை புயல் காரணமாக கல்வி துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 1,600 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் சேதமடைந்துள்ளதுடன், சுமார் 8 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 1 இலட்சத்து 61 ஆயிரம் பேருக்கு ஊட்டச்சத்து உதவி அவசரமாக தேவைப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டத்திற்கு தேவையான நிதியில் இன்னும் பெரும் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இருப்பினும் 20 க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்களிப்புடன் கூடுதல் சர்வதேச உதவிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.




