அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் முகமதிக்கு 7-1/2 ஆண்டுகள் சிறை தண்டனை!
ஈரானிய ஆர்வலரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான நர்கஸ் முகமதிக்கு ( Narges Mohammadi) ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
53 வயதான முகமதி, கடந்த ஒருவார காலமாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மேற்படி தண்டனை பெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
வழக்கறிஞர் கோஸ்ரோ அலிகோர்டியின் (hosrow Alikordi) சந்தேகத்திற்கிடமான மரணத்தை தொடர்ந்து டிசம்பர் 12 ஆம் திகதி முகமதி கைது செய்யப்பட்டிருந்தார்.
மஷாத்தில் நடந்த அலிகோர்டியின் நினைவு விழாவில் ஆத்திரமூட்டும் கருத்துக்களை தெரிவித்ததாகவும், அங்கு இருந்தவர்களை “விதிகளை மீறும் கோஷங்களை முழங்கவும், அமைதியைக் குலைக்க ஊக்குவித்ததாகவும், முகமதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூன்று தசாப்த கால பெண்கள் உரிமைகளுக்கான பிரச்சாரத்தில் அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





