எப்ஸ்டீன் விவகாரம் – ஸ்டார்மர் நேர்மையான மனிதர் என முன்னாள் பிரதமர் புகழாரம்
பிரதமரும் தொழிற்கட்சி தலைவருமான சர் கெய்ர் ஸ்டார்மர் தற்போது எதிர்கொள்ளும் அரசியல் சூழல், மிகவும் தீவிரமானது என பிபிசி ரேடியோ 4 இன் இன்றைய நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் (Gordon Brown) அறிவித்துள்ளார்.
பீட்டர் மண்டேல்சன் தொடர்பான சர்ச்சையில், சரியான நடவடிக்கைகளை எடுக்க ஸ்டார்மர் தாமதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேர்மையான மனிதர் என ஆதரித்து, மண்டேல்சனால் அவர் ஏமாற்றப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அரசியல் அமைப்பில் ஏற்பட்டுள்ள ஊழல் மற்றும் நெறிமுறை குறைபாடுகளைச் சீர்செய்ய ஸ்டார்மரே சரியான நபர் என்றும் முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் தெரிவித்தார்.
இந்த கருத்துக்கள், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு சந்தை உணர்திறன் கொண்ட அரசாங்க தகவல்களை பீட்டர் மண்டேல்சன் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு வெளிவந்துள்ளன.
இதனையடுத்து, மண்டேல்சனுடன் தொடர்புடைய இரண்டு வீடுகளில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் ஸ்டார்மர் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோர்டன் பிரவுன் (Gordon Brown) “அமைப்பை சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதைச் செய்யாவிட்டால் நாடு பெரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்,” என எச்சரித்தார்.
ஸ்டார்மர் சரியானதைச் செய்ய விரும்புபவர் என்றும், எதிர்வரும் மாதங்களில் அவர் எடுக்கும் நடவடிக்கைகளே முக்கியமானவை என்றும் கோர்டன் பிரவுன் கூறினார்.
அண்மையில் வெளியான எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், மண்டேல்சன் உள்அரசாங்க தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்ததாகக் கூறப்படும் மின்னஞ்சல்கள் இடம்பெற்றுள்ளன. இதில், பிரித்தானியாவின் பொருளாதார நிலை, அரச சொத்துகளை விற்பனை செய்வது உள்ளிட்ட தகவல்கள் அடங்குகின்றன.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் €500 பில்லியன் பிணை எடுப்பு அறிவிப்பை முன்கூட்டியே தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனை “நாட்டிற்கான துரோகம்” எனக் குறிப்பிட்ட பிரவுன், இந்த தகவல் கசிவுகள் நாணய சந்தை மற்றும் வணிகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறினார்.
இந்த விவகாரங்கள் தன்னை “அதிர்ச்சியும், கோபமும், ஏமாற்றமும்” அடையச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரித்தானியா அரசியல் அமைப்பில் விரிவான சீர்திருத்தங்கள் அவசியம் என வலியுறுத்திய பிரவுன், சொத்துகளை பறிமுதல் செய்யும் அதிகாரம் கொண்ட ஒரு ஊழல் எதிர்ப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், மூத்த அரசாங்க நியமனங்களுக்கு பொது விசாரணைகள், எம்.பி.க்களின் இரண்டாவது வேலைகளுக்கு தடை போன்ற பரிந்துரைகளையும் அவர் முன்வைத்தார்.
இதனிடையே, பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வில்ட்ஷயர் மற்றும் வடக்கு லண்டனில் உள்ள மண்டேல்சனுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.





