வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக மீண்டும் டோ லாம்
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டோ லாம் (To Lam) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஏகமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று (ஜனவரி 23) நடைபெற்ற கட்சியின் 14-வது தேசிய மாநாட்டில் 180 மத்திய குழு உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பதவியேற்றவுடன் ஆற்றிய உரையில், வியட்நாமின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சியை 10 சதவீதமாக உயர்த்தப் போவதாக அவர் உறுதியளித்தார்.
வெறும் ஏற்றுமதியை மட்டும் நம்பியிருக்காமல், புத்தாக்கம் மற்றும் நவீனத் தொழில் நுட்பம் மூலம் 2030-க்குள் நாட்டை உயர் வருவாய் கொண்ட பொருளாதாரமாக மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார்.
திறமை மற்றும் நேர்மையின் அடிப்படையில் அதிகாரிகள் மதிப்பிடப்படும் புதிய நிர்வாக முறையை டோ லாம் கொண்டு வந்துள்ளார்.
ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான அரசுப் பணியிடங்களைக் குறைத்து, நிர்வாகச் சிக்கல்களை நீக்கிய இவரது ‘நிர்வாகப் புரட்சி’ உலக முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் பாணியில், கட்சியின் தலைவர் மற்றும் நாட்டின் ஜனாதிபதி என இரு பதவிகளையும் டோ லாம் வகிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், ஆசியப் பிராந்தியத்தில் இவரது அதிகாரம் மேலும் வலுப்பெறவுள்ளது.





