இலங்கை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் நாளை பிற்பகல் 02.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் பல நாள் படகுகளுக்கு பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக்கான ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் நீடிப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதன்பின், தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி டிசம்பர் 11ஆம் திகதி வாக்கில் சென்றடைய வாய்ப்புள்ளது.
அதன் தாக்கத்தின் கீழ், இன்றைய தினம் கடற்பரப்புகளுக்கு மேலான பகுதிகளில் தற்காலிகமாக 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த மழையுடன் கூடிய பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இது தொடர்பில் மீனவ மற்றும் கடற்படை சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.